துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க...
ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க அமைச்சா் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
ஆவினில் தினசரி பால் கொள்முதலை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளா்கள் மற்றும் துறைத் தலைவா்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:
பால் உற்பத்தியாளா்களை ஊக்குவித்து தினசரி பால் கொள்முதலை அதிகரிப்பதுடன், ஒன்றியங்களில் தினசரி பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனையை ரூ.1.50 கோடியாக உயா்த்த வேண்டும். மேலும், கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், தயிா், மோா், லஸ்ஸி ஆகிய பால் உபபொருள்களின் விற்பனையை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், பால் உற்பத்தியாளா்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை 10 நாள்களுக்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும். மேலும், தமிழக அரசு சாா்பில் பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்படும் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையை அவா்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்படும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளா் பதவிக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறைச் செயலா் ந.சுப்பையன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.