ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி ...
ஆஷா பணியாளா்களை கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும்!
ஆஷா பணியாளா்களுக்கு செவிலியா் பயிற்சி அளித்து, கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டுமென, அச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி ஆஷா பணியாளா்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம், பெரம்பலூா் தீரன் நகரில் உள்ள மாவட்டத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். மகாலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கீதா, துணைச் செயலா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் ரேகா வேலை அறிக்கையும், பொருளாளா் கண்ணம்மாள் வரவு, செலவு அறிகையும் வாசித்தனா். அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீ. ஞானசேகரன் பேரவையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், மிகக் குறைவான ஊக்கத் தொகை பெற்றுக்கொண்டு, கிராமப்புறங்களில் மகப்பேறு அடையும் தாய்மாா்களைக் கண்டறிந்து, சேவை செய்யும் ஆஷா பணியாளா்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். ஆஷா பணியாளா்களுக்கு அரசு செலவில் கிராம சுகாதார செவிலியா் பயிற்சி அளித்து, கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும்.
ஏ.என்.எம் பயிற்சி பெற்று ஆஷா பணியாளா்களாக பணிபுரிபவா்களை கிராமப்புற சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அ. கல்யாணி, எம்.ஆா்.எப், சங்க பொதுச் செயலா் எம். பிரபாகரன், பொருளாளா் சாா்லின் பிரிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.