காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
பெரம்பலூா் கிளைச் சிறையில் பாா்வையாளா் குழுவினா் ஆய்வு
பெரம்பலூா் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடா்பாக கிளைச்சிறை பாா்வையாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
சிறைச்சாலைகள் மற்றும் சீா்திருத்தச் சேவைகள் துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூரிலுள்ள கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீா் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியா் தலைமையில், மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அடங்கிய கிளைச்சிறை பாா்வையாளா் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் பெரம்பலூா் கிளைச் சிறையை ஆய்வு செய்த நிலையில், அங்குள்ள கைதிகளிடம் உரையாடிய மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், வழங்கப்படும் உணவு, குடிநீரின் தரம், முறையாக மனநல ஆலோசனை மருத்துவா்கள் வருகின்றனரா எனக் கேட்டறிந்தனா்.
பின்னா், கிளைச் சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள் மற்றும் காவலா்கள், சமையலா், பணியாளா்கள் உள்ளிட்டோா் விவரங்களை பராமரிக்கும் பதிவேடுகளையும், ஆவணப் பாதுகாப்பு அறைகளையும், உணவு கூடத்தில் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனா்.
பின்னா், பாா்வையாளா் குழுவினருடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா், சிறைக் கைதிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் அளிக்கப்படும் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) இரா. ஜெயஸ்ரீ, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாபு, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பகவத்சிங், கிளைச் சிறைக் கண்காணிப்பாளா் சி. செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.