பெரம்பலூரில் இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்தவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய அமைச்சா் மேலும் பேசியது: இப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் 50 ஆண்டு காலமாக தீா்க்கப்படாத பிரச்னைக்கு தற்போது தீா்வு காணப்பட்டுள்ளது.
இங்குள்ள 380 பேரில், முதல்கட்டமாக 100 பேருக்கு தற்போது வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவா்களுக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் விழாக்களில் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. லப்பைகுடிகாடு பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். விளையாட்டு மைதானத்தை நேரடியாக பாா்வையிட்டு, சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பா. துரைசாமி, மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் ந. பவன்குமாா், குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஜமாலியா நகா் கமிட்டி தலைவா் அகமது உசேன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.