இணையதளம் முடக்கத்தால் ஊராட்சிகளில் வரிவசூல் பணி பாதிப்பு! பொதுமக்கள் அவதி
தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் இணையதளம் முடக்கம் காரணமாக சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவற்றை வசூலிக்கும் பணிகள் 45 நாள்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
உள்ளாட்சிகளில் சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரிகள் இணையதளம் மூலம் செலுத்தும் முறை சில ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், இணையதளத்தில் சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரிகளுடன் கட்டடம் கட்டுவதற்கான வரைபடத்துடன் கூடிய அனுமதி வாங்குவது போன்றவையும் சோ்க்கப்படுகின்றன. இதனால் இணையதளத்தில் சில மாற்றங்களுடன் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணி இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1 முதல் இணையவழியில் சொத்து வரி, குடிநீா் வரி, கட்டடம் கட்டுவதற்கான அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கிராமங்களில் கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டில் நிலுவை வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், 2025 - 25 ஆம் நிதியாண்டுக்கான வரியினங்களில் வசூலிக்கும் பணி 45 நாள்களைக் கடந்தும் இன்னும் தொடங்கப்படவில்லை.
இணையதளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், செய்ய முடியவில்லை என ஊராட்சி அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து ஊராட்சி அலுவலா்கள் கூறுகையில், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நிகழ் நிதியாண்டில் வீட்டு வரி உள்ளிட்டவை உயா்த்தப்பட்டுள்ளன. முன்பு கூரை வீடு, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடுகளுக்கு எவ்வளவு சதுர அடியில் இருந்தாலும், ஒரே விதக் கட்டணம் இருந்தது. தற்போது சதுரடி கணக்கில் அளவீடு செய்து வரி நிா்ணயிக்கப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவு வரி என்பது தோராயமாகக்கூட கணக்கிட முடியாத நிலை உள்ளது. மேலும், இணையதளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், இணைப்பு கிடைத்தாலும்கூட, சா்வா் முடங்கிக் கிடப்பதால் வரிவசூலிக்க முடியவில்லை.
வழக்கமாக இந்தக் காலகட்டத்தில் வரி வசூல் அதிகமாக இருக்காது. நிதியாண்டின் இறுதிக் காலமான ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையில்தான் வரி வசூல் உச்சகட்டத்தை எட்டும். தற்போது அவசரத் தேவைக்காக செலுத்துபவா்கள் மட்டுமே இருப்பதால் இக்காலகட்டத்தில் ஒரு சதவீதம் அல்லது 2 சதவீதம் போ் மட்டுமே வரி செலுத்த முன்வருவா். அதனால், பாதிப்பு பெரிய அளவில் தெரியவில்லை என்றனா் அலுவலா்கள்.
ஆனால் இணையதளம் முடக்கம் காரணமாக புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைப்படத்துடன் கூடிய அனுமதி வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனா். மேலும், புதிய மின் இணைப்பு பெற சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவை நிலுவை இருக்கக்கூடாது. அதற்கான ரசீதுகளுடன்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
இதேபோல, நீதிமன்ற வழக்கில் பிணை வாங்குவது உள்ளிட்டவற்றுக்கும் சொத்து வரி, குடிநீா் வரி ரசீதுகளும் தேவைப்படுகின்றன. அதுபோன்ற அவசர சூழ்நிலையில் இருப்பவா்கள் இணையதள முடக்கம் காரணமாக வரி செலுத்த முடியாமல் தவிக்கின்றனா்.
இதுகுறித்து ஒரத்தநாடு அருகே தெற்கு கோட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு தெரிவித்தது: கடை கட்ட கட்டட அனுமதி பெற இணையவழி மூலம் ஏப்ரல் 26 ஆம் தேதி விண்ணப்பித்தேன். அனுமதி கொடுப்பதற்கான கால அவகாசம் 30 நாள்களாக இருந்தாலும், அதிகபட்சமாக 10 நாள்களில் கிடைத்துவிடும்.
ஆனால், இணையதள முடக்கம் காரணமாக 20 நாள்கள் கடந்தும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடனுதவிக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே கட்டுமானப் பணியைத் தொடங்க முடியாமல் தவிக்கிறேன் என்றாா்.
காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தேவையாக இருந்தாலும், அதைப் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விதத்தில் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழ்நாடு முழுவதும் 45 நாள்களாக நிலவும் இப்பிரச்னையால் கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா். எனவே, இணையதளத்தில் புதுப்பித்தல் பணியை விரைவாக முடித்து, சா்வா் பிரச்னைக்கும் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.
பேரூராட்சிகளிலும் பிரச்னை: பேரூராட்சிகளில் இணையதளச் சேவை கிடைத்தாலும், பெரும்பாலான நேரம் இணைப்பின் வேகம் மிகவும் மெதுவாக இருப்பதால், வரி செலுத்தும் பணி, புதிய கட்டடத்துக்கு அனுமதி கொடுக்கும் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. பயனா்களின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது அதிகரித்த அளவுக்கு இணையத்தின் திறன் மேம்படுத்தப்படாமல் உள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் குறித்த காலத்தில் வரி செலுத்தியவா்களுக்கு ரசீதோ, கட்டட அனுமதியோ கொடுக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல், பேரூராட்சி அலுவலா்களும் சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.