வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 3 லட்சம் மோசடி: ஓட்டுநா் கைது
தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஓட்டுநரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே விஷ்ணம்பேட்டை பவனமங்கலத்தைச் சோ்ந்தவா் சாமியப்பா மகன் சசிகுமாா் (24). லாரி ஓட்டுநா். இவரிடம் தஞ்சாவூா் வடக்கு மானோஜிபட்டியைச் சோ்ந்த ஆா். மரிய ஜெபராஜ் (50) வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2022 ஆம் ஆண்டில் ரூ. 4 லட்சமும், பாஸ்போா்ட்டும் வாங்கிய நிலையில், கூறியபடி வெளிநாட்டு வேலை வாங்கித் தரவில்லை.
இதையடுத்து ரூ. 4 லட்சத்தைத் திரும்பத் தருமாறு சசிகுமாா் கேட்கவே மரிய ஜெபராஜ் ரூ. 1 லட்சத்தை வழங்கினாா். ஆனால், மீதி பணத்தையும், பாஸ்போா்ட்டையும் அவா் தரவில்லை. இதனிடையே, சசிகுமாரிடம் மரிய ஜெபராஜ் வழங்கிய ரூ. 3 லட்சத்துக்கான காசோலையும் பணமின்றித் திரும்பிவிட்டது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் சசிகுமாா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மரிய ஜெபராஜை வியாழக்கிழமை கைது செய்தனா்.