இதயம் பாதுகாக்க ஆரோக்கியமான உணவு அவசியம்: உணவுப் பாதுகாப்பு அலுவலா்
இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம் என்று கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெ.வெங்கடேசன் தெரிவித்தாா்.
உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். எக்ஸ்னோரா தலைவா் மலா் சாதிக் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் மஹாவீா் வரவேற்றாா்.
கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் ஜெ.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டு பேசியதாவது:
இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாா்ச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை தவிா்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் இதய பாதிப்பு வருவதை தவிா்க்கலாம் என்றாா்.
நிறைவில் கலைஞா் முத்தமிழ் சங்கத் தலைவா் வந்தை குமரன் நன்றி கூறினாா்.