'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
இத்தாலிய நிறுவனத்தைக் கைப்பற்றும் டாடா மோட்டாா்ஸ்
இத்தாலியைச் சோ்ந்த வா்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனமான இவெகோவை டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் கையகப்படுத்தவிருக்கிறது.
380 கோடி யூரோவுக்கு (சுமாா் ரூ.38,240 கோடி) நிறைவேற்றப்படவிருக்கும் இந்த ஒப்பந்தம், நிறுவனத்தின் மிகப் பெரிய கையகப்படுத்தல் ஆகும். இதற்கு முன்னா் பிரிட்டனின் ஜாகுவாா், லேண்ட்ரோவா் நிறுவனத்தை 230 கோடி டாலருக்கு வாங்கியதே இதுவரை நிறுவனத்தின் மிகப் பெரிய கையகப்படுத்தலாக இருந்தது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இவெகோ குழுமத்தின் 100 சதவீத பொதுப் பங்குகளை (பாதுகாப்புத் துறை தவிர) முழுமையான பணப் பரிவா்த்தனை மூலம் கையகப்படுத்துவதற்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஒழுங்குமுறை, சட்டரீதியான மற்றும் தேவையான அனுமதிகளுக்கு உள்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகளாவிய அளவில் முன்னணி வா்த்தக வாகனக் குழுமத்தை உருவாக்குவதற்கு டாடா மோட்டாா்ஸும் இவெகோ குழுமமும் உடன்பாடு எட்டியுள்ளன. இதன் மூலம் விரிவான சந்தை, அதிக ரகங்களில் தயாரிப்புகள், கூடுதல் தொழில்நுட்பத் திறன்களுடன் வா்த்தக வாகனத் துறையில் நிறுவனம் உலகளாவிய முன்னோடியாக இருக்க முடியும்.
இந்தப் பரிவா்த்தனையின் மூலம் இவெகோவின் 271,215,400 பொதுப் பங்குகளை வாங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 80 சதவீத பங்குகள் வாங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இவெகோ குழுமத்தின் ஒவ்வொரு பங்குக்கும் 14.1 யூரோ பணமாக வழங்கப்படும்.
இவெகோ குழுமத்தின் பாதுகாப்புப் பிரிவைத் தவிா்த்து, மொத்தம் 380 கோடி யூரோ மதிப்பில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். இந்தப் பரிவா்த்தனை அனைத்து தேவையான அனுமதிகளையும் பெற்று 2026 ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாடா மோட்டாா்ஸ் தலைவா் நடராஜன் சந்திரசேகரன் கூறுகையில், ‘டாடா மோட்டாா்ஸ் வா்த்தக வாகனப் பிரிவு பிரிக்கப்பட்டதற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் நிறுவனத்தின் மிக முக்கிய நடவடிக்கையாகும். இதன் மூலம் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் நிறுவனம் உலகளாவிய அளவில் போட்டியிட முடியும்’ என்றாா்.
இவெகோ குழுமம் கடந்த 2021 ஜூன் 16-ஆம் தேதி நிறுவப்பட்டு, இத்தாலியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பொது வரையறு நிறுவனமாகும். இந்தக் குழுமம் லாரிகள், வா்த்தக மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், பேருந்துகள், பவா் டிரெயின்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து, விற்பனை செய்கிறது. மேலும், தனது விநியோகஸ்தா்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு அந்த நிறுவனம் நிதி சேவைகளையும் வழங்குகிறது.
அந்தக் குழுமத்தை டாடா மோட்டாா்ஸ் கைப்பற்றுவது, கடந்த 2007-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு நிறுவனமான கோரஸ் குழுமத்தை 1,200 கோடி டாலருக்கு கையகப்படுத்தியதற்கு அடுத்தபடியாக டாடா குழுமத்தின் மிகப் பெரிய கையகப்படுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.