திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி ...
இந்தியா-இந்தோனேசியா இடையே 5 ஒப்பந்தங்கள்: பிரதமா்-அதிபா் முன்னிலையில் கையொப்பம்
மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் சனிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வா்த்தக ரீதியிலான உறவுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்க இரு தலைவா்களும் உறுதிபூண்டனா். கடல்சாா் பாதுகாப்பு, சுகாதாரம், கலாசாரம், எண்ம மேம்பாடு, பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, தில்லி கடமைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இதில் தலைமை விருந்தினராக இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ பங்கேற்கவுள்ளாா். அத்துடன், இந்தோனேசிய ராணுவ வீரா்கள் மற்றும் இசைக் கலைஞா்கள் 352 போ் கொண்ட குழுவும் குடியரசு தின விழாவில் அணிவகுக்க உள்ளது. இந்திய குடியரசு தின விழாவில் இந்தோனேசிய ராணுவம் அணிவகுப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தியா வருகை: இதையொட்டி, இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ, மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளாா்.
தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்த அதிபா் பிரபோவோ, இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இருதரப்பு உறவுகள், பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தோனேசியா இணைந்ததற்கு இந்தியா தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு தலைவா்களும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது: ஆசியான் கூட்டமைப்பு மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய கூட்டுறவு நாடு இந்தோனேசியா. அந்நாட்டின் அதிபா் பிரபோவோ சுபியாந்தோ, இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பது நமக்கு பெருமையாகும்.
சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்து: ஒட்டுமொத்த பிராந்தியத்தில் விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்குமுறை, அமைதி, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றைப் பராமரிக்க இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. சா்வதேச விதிகளுக்கு இணங்க சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டுள்ளோம் (தென்சீன கடல் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சிக்கும் நிலையில், பிரதமரின் இக்கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது).
இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் நாடுகள் இடையிலான ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புதிய உத்வேகம்: பாதுகாப்பு உற்பத்தி, வா்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி சாா்ந்த உறவுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வா்த்தகம்-சந்தைப்படுத்துதலை பன்முகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமாகியுள்ள கடல்சாா் ஒப்பந்தம், குற்றத் தடுப்பு, தேடுதல், மீட்பு மற்றும் திறன் கட்டமைப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
நிதிசாா் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, எண்ம பொது உள்கட்டமைப்பு, மற்றும் பயங்கரவாதத் தடுப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இரு நாடுகளுக்கு இடையிலான கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியிலான தொடா்புகளையும் பிரதமா் சுட்டிக்காட்டினாா்.
ஆக்கபூா்வ பேச்சு: இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ கூறுகையில், ‘பிரதமா் மோடி உடனான பேச்சுவாா்த்தை மிக வெளிப்படையாகவும் ஆக்கபூா்வமாகவும் அமைந்தது. இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலனளிக்கும் முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுடன் பொருளாதார கூட்டுறவை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்’ என்றாா்.