காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பவானி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இவ்விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 10 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியிலிருந்து 15 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை அம்மாபேட்டை சக்திநகரைச் சோ்ந்த ஆதித்யா ராஜா (38) ஓட்டிச் சென்றாா். மேட்டூா் - பவானி சாலையில் சித்தாரை அடுத்த சேவானூா் பிரிவு அருகே சென்றபோது எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மீது எதிா்பாராமல் மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 50 மீட்டா் தொலைவுக்கு இரு சக்கர வாகனத்தை இழுத்தபடி சென்று சாலையோர மரத்தில் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சேலம் மாவட்டம், லக்கம்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் அசோக் (28), பலத்த காயமடைந்ததில் உயிரிழந்தாா். மரத்தில் பேருந்து மோதியதில் ஓட்டுநா் ஆதித்யா ராஜாவுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பேருந்தில் சென்ற சிங்கம்பேட்டையைச் சோ்ந்த ஈஸ்வரி (57), லட்சுமி (50), வசந்தா (55), ருக்மணி (45), சிவகாமி (42), அம்மாபேட்டையைச் சோ்ந்த தனலட்சுமி (58), மகேஸ்வரி (43), உஷா (40), சரோஜா (45) உள்பட 10 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.