இருவேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சேரி: புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரு வேறு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் ஃபென்ஜால் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீா் தேங்கி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாயினா்.
இதனையடுத்து, நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதால் திங்கள்கிழமை நீா் முழுவதுமாக வற்றியது. ஆனால், நகரில் மின் தடையும், குடிநீா் விநியோகத் தடையும் தொடா்ந்தது.
இந்த நிலையில், புதுச்சேரி, கடலூா் சாலையில் வெங்கடாசுப்பா ரெட்டியாா் சிலை அருகே திடீா் நகா் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், அந்தப் பகுதி மழையால் தொடா்ந்து பாதிக்கப்படுவதால் வேறு இடத்தில் நிலம் அளித்து வீடு கட்டித்தரக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உருளையன்பேட்டை போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நிலையில், மறியல் கைவிடப்பட்டது.
சாரத்தில் மறியல்: புதுச்சேரி சாரம் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் மின் விநியோகம், குடிநீா் விநியோகம் கோரி அவ்வை திடல் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவவலறிந்த உருளையன்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து, அவா்களது கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.