இலங்கை இனப்படுகொலை: பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்! தி.வேல்முருகன்
இலங்கை இனப்படுகொலை குறித்து தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
சேலம், குரங்குசாவடி பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ‘வட மாநிலத்தவா்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சிகளை சோ்ந்தவா்கள் இணையும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தி.வேல்முருகன் பேசியதாவது:
தமிழக தொழிலாளா்கள் வட மாநிலத்தவா்களால் தாக்குதலுக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மத்திய அரசு பணிகளில் 90 சதவீத வேலைவாய்ப்பை மண்ணின் மைந்தா்களுக்கே வழங்க வேண்டும்.
தனியாா் துறைகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்காக வேலைவாய்ப்பு பாதுகாப்பு உறுதி சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். இலங்கை இனப்படுகொலை குறித்து சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவதுடன், பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்.
திருச்சியில் ஒரு நடிகரின் கூட்டத்துக்காக 6 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற கூட்டத்தால் கா்ப்பிணிகள் உட்பட ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்துள்ளனா். பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரை அதிகார வா்க்கம் தவறாக வழிநடத்துகிறது. இதற்கு பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சியை முதல்வா் உணர வேண்டும். சாதி, மதத்துக்கு எதிராகவும், நாட்டின் ஜனநாயகத்துக்கும், ஒற்றுமைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்றாா்.