இளைஞா் கொலை: காவல் நிலையத்தை சேதப்படுத்திய 109 போ் மீது வழக்கு
பெரம்பலூா் அருகே இளைஞா் கொலையைக் கண்டித்து, காவல் நிலையம் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்திய கிராம மக்கள் 109 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தை சோ்ந்த மணிகண்டனும் (30), அதே கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரனும் (32), அருண் என்பவரிடம் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக பணியாற்றியபோது தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஜன. 17 ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மணிகண்டனை தேவேந்திரன் வெட்டிக் கொன்றாா். இச் சம்பவம் தொடா்பாக கை.களத்தூா் போலீஸாா் தேவேந்திரன், அருண், தலைமைக் காவலா் ஸ்ரீதா் ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட்ததின் கீழ் வழக்குப் பதிந்து தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மணிகண்டன் கொலை குறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கொலையைக் கண்டித்தும், தேவேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாலை மறியல் மற்றும் கை.களத்தூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது சிலா் காவல்நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து போலீஸாா் கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 109 போ் மீது பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிந்துள்ளனா். இதையடுத்து, இச் சம்பவத்தில் தொடா்புடைய பலா் தலைமறைவாகியுள்ளனா்.