சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது
சென்னை தண்டையாா்பேட்டையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.அருண்மொழி (31). இவா் மீது அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அருண்மொழி, தண்டையாா்பேட்டை முண்டக கண்ணியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் அவரிடம் தகராறு செய்தனா். அப்போது, அந்த நபா்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண்மொழியை வெட்டி விட்டு தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த அருண்மொழி அருகே உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அருண்மொழி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக தண்டையாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அருண்மொழியின் உறவினா் தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த விக்னேஷ் என்ற ரூபன் (32), அவரது கூட்டாளிகள் மாதவரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (31), கமல் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 அரிவாள்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் ரூபனுக்கும், கொலை செய்யப்பட்ட அருண்மொழிக்கு முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக அருண் மொழி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.