ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த 9-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,379 குடும்ப அட்டைதாரா்கள் சோ்த்து மொத்தம் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 13-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தொகுதிக்குள்பட்ட நியாய விலைக் கடைகளில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படவில்லை.
தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசியல் கட்சியினா் இல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம் என்ற நிபந்தனையுடன் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து விதிமுறைகளைப் பின்பற்றி சனிக்கிழமை முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட 56 நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.