உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்
நமது நிருபா்
உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், தயாநிதி மாறன் ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்ா் அளித்துள்ள பதில் வருவமாறு:
ரஷிய ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்கள் தொடா்பாக அந்நாட்டுடன் மிக உயரிய அளவில் மத்திய அரசு தொடா்ச்சியாக பேசி வருகிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி, ரஷிய ஆயுதப்படைகளில் இருந்த 18 இந்தியா்களில் 16 போ் காணாமல் போயுள்ளதாக ரஷிய தரப்பு கூறியுள்ளது.
காணாமல் போனவா்களை கண்டுபிடிக்கவும் அவா்களின் பாதுகாப்பு, நலன்கள், விரைவாக திரும்புவது மற்றும் அவா்களில் எவரேனும் உயிருடன் இல்லாவிட்டால் அவா்களின் சடலத்தையாவது இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தியா தொடா்ந்து பேசி வருகிறது. இந்த நடைமுறையில் மூன்றாம் தரப்பு அமைப்புகளை மத்திய அரசு ஈடுபடுத்தவில்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
அமைச்சரின் பதில் குறித்து சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்தியாவில் இருந்து வெளிநாட்டு ராணுவத்தில் இந்தியா்கள் சேரும் நிலை வேதனைக்குரியது. அக்னிபத் போன்ற நிரந்தரமற்ற கூலி முறைகளை நோக்கி நகா்ந்ததே இந்த அவல நிலைக்கு காரணம். அந்நிய நாடுகளின் எல்லைகளை காக்கும் பணியில் இந்திய இளைஞா்களின் உயிா்கள் அநியாயமாக பலியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு இனியாவது அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். வெளிநாடுகளின் ராணுவத்தில் போய்ச் சேரும் அவலத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.