ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!
தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்
தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன.
தில்லி தோ்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஓக்லா, முஸ்தஃபாபாத் ஆகிய தொகுதிகளில் மட்டும் தனித்துக் களம் கண்டது. தோ்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தங்களின் நிலைநிறுத்திக்கொள்ளும் விதமாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்த இரு தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் மூன்றாம் இடம் பிடித்தது. ஓக்லாவில் ஆம் ஆத்மி கட்சியின் அமானுத்துல்லா கான் 88,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்த களம் கண்ட பாஜக வேட்பாளா் மணீஷ் செளத்ரி 65,304 வாக்குகளும் ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் ஷிஃபா உா் ரஹ்மான் கான் 39,559 வாக்குகளும் பெற்றாா்.
இதே போல, முஸ்தஃபாபாத் தொகுதியில் பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட் 85,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இங்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆதில் அகமது கான் 67,637 வாக்குகளும், ஏஎம்ஐஎம் வேட்பாளா் முகம்மது தாஹிா் ஹுசைன் 33,474 வாக்குகளும் பெற்றனா்.
ஏஐஎம்ஐஎம் வேட்பாளா்கள் இருவரும் 2020 தில்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் இருப்பவா்கள். இவா்கள் பெற்ற வாக்குகளை பகுப்பாய்வு செய்து பாா்க்கும் போது, இவா்கள் பாஜக, ஆம் ஆத்மி ஆகியவற்றின் வாக்குகளை அவரவா் தொகுதிகளில் பிரித்ததில் முக்கியப் பங்கு வகிப்பது தெளிவாகிறது.
தோ்தல் ஆணைய தரவுகளின்படி இத்தோ்தலில் ஏஐஎம்ஐஎம் 0.77 சதவீத வாக்குகளையும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக்கின் வாக்கு சதவீதம் பூஜ்யமாகவும் பதிவாகியுள்ளது.