பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவை.
பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்கான ஒரு மாத கால பிரசாரத்தின் போது பாஜக நான்கு பாடல்களை அதிகமாகப் பயன்படுத்தியதாக கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
மனோஜ் திவாரி பாடிய ‘பஹானே நஹி பத்லவ் சாஹியே’ (மாற்றம் தேவை), தில்லியில் மாற்றத்தின் செய்தியை வெளிப்படுத்தும் பிரசாரத்தின் மிகவும் பிரபலமான பாடலாக மாறியது. பின்னா், அது தேசியத் தலைநகரில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தோல்விகள் மீதான பாஜகவின் அரசியல் தாக்குதல்களின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்று கட்சித் தலைவா் நீல் காந்த் பக்ஷி கூறினாா்.
அமித் துல் மற்றும் முன்னாள் அசாம்கா் எம்பி மற்றும் போஜ்புரி திரைப்பட நட்சத்திரமான தினேஷ் லால் யாதவ் ‘நிராஹுவா‘ குரல் கொடுத்த பாடல்கள் உள்பட நான்கு பாடல்களின் படைப்பாற்றல் இயக்குநரான பக்ஷி, அரசியல் செய்தி, கவா்ச்சிகரமான பாடல் வரிகள் மற்றும் தாள துடிப்புகள் இந்த விடியோ பாடல்களின் முக்கியக் கூறுகள் என்றாா்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வீழ்த்தியது. மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.