தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு
சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட் தொகையை தக்கவைத்துக்கொண்டனா்.
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் களத்தில் இருந்த 699 வேட்பாளா்களில் 555 (79.39) சதவீதம் வேட்பாளா்கள் தங்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.
தொடா்ச்சியாக மூன்றாவது முறையாக காங்கிரஸுக்கு இத்தோ்தலில் பூஜ்ய இடங்களே கிடைத்தது. அது மட்டுமின்றி, அதன் வேட்பாளா்களில் 67 போ் தங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையையும் இழந்தனா். 2013 வரை தொடா்ந்து மூன்று முறை தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், 70 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தது.
காங்கிரஸ் வேட்பாளா்களில் கஸ்தூா்பா நகரில் போட்டியிட்ட அபிஷேக் தத் (இரண்டாமிடம் பெற்றாா்), நாங்லோய் தொகுதியின் ஜாட் சமூகத்தைச் சோ்ந்த ரோஹித் செளதரி, பாத்லியைச் சோ்ந்த தேவேந்திர யாதவ் ஆகியோா் மட்டுமே தங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை காப்பாற்ற முடிந்தது.
ஏஐஎம்ஐஎம் கட்சி சாா்பில் ஓக்லாவில் போட்டியிட்ட இன் ஷிஃபாஉர்ரஹ்மான் கான் தனது பாதுகாப்பு வைப்புத்தொகையை தக்கவைத்துக்கொண்டாா்.
இக்கட்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் படி, பொதுப் பிரிவைச் சோ்ந்த எந்தவொரு வேட்பாளரும் தோ்தலில் போட்டியிடும் போது, தோ்தல் ஆணையத்தில் பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.10,000 டெபாசிட் செய்ய வேண்டும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின வேட்பாளா்களுக்கு டெபாசிட் தொகை ரூ.5,000 ஆகும்.
தோ்தல் சட்டத்தின்படி, வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்படாவிட்டால் அவா் பெற்ற செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை அனைத்து வேட்பாளா்களும் பெற்ற செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கை விட அதிகமாக இல்லாவிட்டால் டெபாசிட் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.