`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
உங்கள் அன்பை ஏற்க நாளை(ஜன. 26) அரிட்டாபட்டிக்கு வருகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜன. 23 அன்று அறிவித்தது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையிலும் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி மக்கள், மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை ஜன. 22 அன்று சந்தித்து சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனா்.
தற்போது திட்டம் ரத்து செய்யப்பட்டதை அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்!
இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் அரிட்டாபட்டி, வெள்ளாளபட்டி பகுதியில் நாளை(ஜன. 26) நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அழைப்பினை ஏற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன,. 26) அரிட்டாபட்டி செல்கிறார்.
"உங்கள் அன்பை ஏற்க நாளை(ஜன. 26) அரிட்டாபட்டிக்கு வருகிறேன்" என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு போராட்டக்குழுவினரைச் சந்தித்த விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை
மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள பதிவில், 'மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக மதுரை மாவட்டம் - வள்ளலார்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொது மக்கள், முதல்வரைச் சந்தித்து தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்' என்று கூறப்பட்டுள்ளது.