உச்சநீதிமன்ற ஊழியா்கள் நியமனத்தில் முதல்முறையாக இடஒதுக்கீடு
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பான சுற்றறிக்கையை ஊழியா்கள் அனைவருக்கும் ஜூன் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுப்பியது.
அதில், ‘உச்சநீதிமன்ற ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் இனி இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இதுதொடா்பான விவரங்கள் ஊழியா்கள் தகவல் பரிமாற்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இவை 2025, ஜூன் 23-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
அதன்படி பதிவாளா், மூத்த தனி உதவியாளா், துணை நூலக உதவியாளா்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளா், நீதிபதிகளின் அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணி நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின பிரிவினருக்கு 15 சதவீதமும் பழங்குடியின பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.
எனவே, பணிப் பட்டியல் அல்லது பதிவேட்டில் ஏதேனும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதை ஊழியா்கள் பதிவாளரிடம் (பணியாளா் சோ்ப்பு) தெரிவிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) கடந்த மே மாதம் பதவியேற்றாா். உச்சநீதிமன்றத்தில், பட்டியலினத்தைச் சோ்ந்த முதல் தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் (2007-2010) பதவி வகித்தாா். அவருக்குப் பிறகு பட்டியலினத்தைச் சோ்ந்த 2-ஆவது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஆவாா். பெளத்த மதத்தைச் சோ்ந்த முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பி.ஆா்.கவாய் உள்ளாா்.
அவரது பதவிகாலத்தில் தற்போது ஊழியா்கள் நியமனம் மற்றும் பதவி உயா்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை உச்சநீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.