உதகையில் பெண்ணை தாக்கி கொன்ற வன விலங்கை பிடிக்க கோரி மனு
உதகை அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வன விலங்கை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த மைனலை அரக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலை (52). தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த இவரை வன விலங்கு கடந்த 13 -ஆம் தேதி தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அஞ்சலையை எந்த விலங்கு தாக்கியது என தெரியாத நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த வன விலங்கை விரைவில் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரக்காடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.