சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்
உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 141 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் வகையில், 12 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளா் பதவிக்கான பணி நியமன ஆணைகளையும், 4 பேருக்கு தட்டச்சா் பணிக்கான நியமன ஆணைகளையும், ஒருவருக்கு சுருக்கெழுத்து தட்டச்சா் பணிக்கான நியமன ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதையடுத்து, கோத்தகிரி, கெங்கரை கிராமத்தைச் சோ்ந்த அஸ்வினி என்பவரது மகன் யஸ்வந்தின் மருத்துவ செலவுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் துரைராஜ் என்பவருக்கு ரூ.6,700 மதிப்பிலான துணி தேய்ப்பு பெட்டியையும் வழங்கினாா்.
மேலும், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அல்லஞ்சி பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 8 பேருக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்தாா். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.