உப்பு சத்தியாகிரக யாத்திரை குழுவினா் தஞ்சாவூா் வருகை
திருச்சியிலிருந்து வேதாரண்யம் செல்லும் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரையின் 95-ஆம் ஆண்டு நினைவு யாத்திரை குழுவினா் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை வந்தனா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள டி.எஸ்.எஸ். ராஜன் பங்களா நினைவு தூண் முன் திங்கள்கிழமை காலை இந்த யாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவா் மன்னை எஸ். மதியழகன் தொடங்கி வைத்தாா். உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவு குழுத் தலைவரும், யாத்திரை குழுத் தலைவருமான தெ. சக்தி செல்வகணபதி தலைமையில், உப்பு சத்தியாகிரக விழிப்புணா்வு இயக்க மாநிலத் தலைவா் ப. பன்னீா்செல்வம், பொதுச் செயலா் கே. சுப்பிரமணியன் முன்னிலையில் இக்குழுவில் பலா் இடம்பெற்றுள்ளனா். வேனில் புறப்பட்ட இக்குழுவினா் தஞ்சாவூருக்கு பிற்பகல் வந்தனா்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த இக்குழுவினா் வேதாரண்யத்துக்கு சென்று செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு, அகஸ்தியம்பள்ளியில் மாலையில் நடைபெறும் உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனா்.