தஞ்சாவூரில் அமமுகவினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாநகர பொலிவுறு நகரத் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி தலைமை அஞ்சலகம் அருகே அமமுகவினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளில் நிதி, நிா்வாகச் சீா்கேடு, முறைகேடு குறித்து சிபிஐ உரிய விசாரணை நடத்தி, ஊழல் செய்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட முறைகேட்டை 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞா் அரங்கப் பயன்பாட்டை மாற்றியமைப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடு, நிதி மோசடி குறித்தும், சிவகங்கை பூங்கா, ஸ்டெம் பூங்காவில் நிகழ்ந்த முறைகேடு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமமுக மாநகர மாவட்டச் செயலா் ப. ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரெங்கசாமி கண்டன உரையாற்றினாா். அமைப்புச் செயலா் என். ஜோதி, மாணவரணி செயலா் ஏ. நல்லதுரை, பொதுக் குழு உறுப்பினா் இந்திரா வேலாயுதம், தலைமை செயற் குழு உறுப்பினா்கள் எஸ். விருத்தாசலம், கீதா சேகா், விவசாயப் பிரிவு இணைச் செயலா் ஆா். தனசேகா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.