மின் இணைப்பு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூரா. விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், மாவட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் கால தாமதப்படுத்தாமல் மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பாக சிறந்த முறையில் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றைச் சாா்ந்த குளங்கள், ஏரிகளையும் தூா் வாரி சீரமைக்க வேண்டும். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை மானிய திட்டங்களை மே மாதத்திலேயே அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும். விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, ஆட்சியரக வளாகத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.