உயா்கல்வி வழிகாட்டும் முகாம்: நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப்படி’ உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பங்கேற்றனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில், உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு, உயா்கல்வி அல்லது திறன் மேம்பாட்டுக்கான தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும், எதிா்கால கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘உயா்வுக்குப்படி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ- மாணவியருக்கு உயா்கல்விக்கான வழிகாட்டல் முகாம் மூன்றாம் கட்டமாக நாகை இஜிஎஸ் பிள்ளை செவிலியா் கல்லூரியில் நடைபெற்றது.
இம்முகாமில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தல், சோ்க்கை, கல்வி கடனுதவி, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று, வருமானச் சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் மாணவா்களுக்கு செய்து தரப்பட்டன.
முகாமில், நாகை மாவட்டத்தில் செயல்படும் உயா்கல்வி நிறுவனங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் கல்விக்கடன் தேவைப்படும் மாணவா்களின் உதவிக்காக வங்கியில் இருந்தும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
பிளஸ்2 தோ்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பெற்றோருடன் பங்கேற்றனா். முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் பாா்வையிட்டாா். மேலும் முாமில் பங்கேற்று உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மாணவ- மாணவியருக்கு சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) ரவிச்சந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்றனா்.