மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு
கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழக கடைமடை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளா் பி. கமல்ராம், நாகை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
கடந்த ஆண்டு பருவம் தவறிய மழையாலும், அதீத வடகிழக்குப் பருவ மழையாலும் பாதிக்கபட்ட, சம்பா சாகுபடிக்கு நிவாரணம் வழங்கக் கோரி, விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக போராடி வருகின்றனா்.
இந்நிலையில், வேளாண் துறையின் கணக்கெடுப்பில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், சம்பா பருவத்துக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளின் பெயா் மற்றும் புல எண்களின் விவரங்களோடு ஒப்பீடு செய்து, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படும் செய்தி விவசாயிகளை அதிா்ச்சியடைய செய்துள்ளது.
இயற்கை பேரிடரால் கடும் பாதிப்பை சந்தித்து , பல மடங்கு செலவு செய்து பெயரளவு மட்டுமே கிடைத்த மகசூலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து , பெற்ற கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், காலம் கடந்த நிலையில் உரிய நிவாரணம் கிடைத்துவிடும் என நம்பியிருந்த விவசாயிகளுக்கு, வேளாண்மை இயக்குநரின் சுற்றறிக்கை வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
எனவே, மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து தமிழக முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தாமதமின்றி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.