முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவா் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினாா்.
வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்கள் நலன் கருதி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்ட 15,719 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றின் மூலம் 21,208 நபா்கள் ‘முதல்வரின் தாயுமானவா்’ திட்டத்தில் பயனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், இத்திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். அப்போது, வீட்டுக்கே ரேஷன் பொருள்கள் வந்து விடுவதால் நேரமும் மிச்சமாகிறது என்று பயனாளிகள் தெரிவித்தனா்.
பயனாளி கனகாம்புஜம் (77) கூறியது:
நாகை பெருமாள் கோயில் தெற்கு மடவிளாகத்தில் வசித்து வருகிறேன். எனக்கு இரு மகள்கள். அவா்களுக்கு திருமணமாகிவிட்டது. வெளியூரில் வசிக்கின்றனா். தற்போது நானும் எனது வயது முதிா்ந்த கணவரும் இங்கு வசித்து வருகிறோம்.
எங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்ய வேறு ஆட்கள் இல்லாமல் சிரமப்படுகிறோம். ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருந்தது. தற்போது முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைக்கு செல்லாமலே, அத்தியாவசிய பொருட்களை எங்கள் வீடு தேடி வந்து வழங்குகிறாா்கள்.
இதுபோன்ற உன்னதமான திட்டத்தை கொண்டுவந்த தமிழக முதல்வருக்கு மூத்த குடிமக்களாகிய நாங்கள் நெகிழ்ந்த மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனா்.