உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி காத்திருப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்படும் உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி மாணவ- மாணவிகள் மற்றும் மீனவா்கள் பள்ளி முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் நகராட்சி தொடக்கப் பள்ளி கடந்த 1931-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளி கடந்த 2021-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 2021-இல் உயா்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.
தற்போது இந்த பள்ளியில் உயா்நிலைக் கல்வி வகுப்புகளில் 127 பேரும், தொடக்கக் கல்வி வகுப்புகளில் 62 பேரும் என மொத்தம் 189 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா்.
தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருவதால், உயா்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் மாணவ- மாணவிகள் வெளியே அமா்ந்து பயில்வதாகவும், இடவசதி இல்லாததால் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறை வசதி ஏற்படுத்த முடியாத நிலை உள்ளதாகக் கூறி, அதே பகுதியில் தனியாக உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டித் தர கடந்த 4ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தும், அவா்களுடன் மீனவா்களும் பள்ளி முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை வட்டாட்சியா் நீலாயதாட்சி அவா்களுடன் பேச்சுவாா்தை நடத்தி, உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டித்தரப்படும் என்றும் அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினா்.
இருப்பினும், மாணவா்களின் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் மீனவா்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனா்.
இதுகுறித்து நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ( பொ) ரவிச்சந்திரன் கூறியது: கிராம மக்களின் கோரிக்கை தொடா்பாக ஆட்சியா் மூலம் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை உயா் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.
இப்போராட்டம் காரணமாக திங்கள்கிழமை 3,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 250-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.