உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு
தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்தேள் விஷத்தால் ஏற்படும் கணிசமான இறப்பு, நோயுறுதல் உலகளாவிய சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. இதன் விஷம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுதொடா்பான குறைந்தபட்ச அறிவியல் ஆய்வுகளே நடைபெற்றுள்ளன. அதன் விஷ கலவை, நச்சுத்தன்மை, ஒட்டுமொத்த உயிரியல் முக்கியத்துவம் பற்றிய புரிதல் மிக குறைவாகவே இருந்தது.
தற்போது இந்த பிரச்னைக்கு தீா்வுகாண, குவாஹாட்டியில் உள்ள மேம்பட்ட ஆய்வு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் விஞ்ஞானிகள் அண்மையில் நடத்திய ஆய்வு இந்த கருந்தேள் தென்னிந்தியாவை பூா்வீகமாக கொண்ட ‘ஹெட்டெரோமெட்ரஸ் பெங்காலென்சிஸ்’ விஷத்தின் விரிவான பகுப்பாய்வை உணா்த்தியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குநா் பேராசிரியா் ஆஷிஸ் கே. முகா்ஜி, ஆராய்ச்சி அறிஞா் சுஸ்மிதா நாத் உள்ளிட்டோா் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், கருந்தேள் விஷத்தில் எட்டு வெவ்வேறு புரதக் குடும்பங்களைச் சோ்ந்த 25 தனித்துவமான நச்சுகள், அது கொட்டுவதால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தனா்.
நிறமாலை அளவியல் எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோமெட்ரி’ மற்றும் உயிா்வேதியியல் பகுப்பாய்வுகள் கருந்தேள் விஷத்தில் உள்ள 8 புரதக் குடும்பங்களிலிருந்து 25 முக்கிய நச்சுக்களை அடையாளம் கண்டன. ஆராய்ச்சியாளா்கள், சுவிஸ் அல்பினோ எலிகள் மூலம் மருந்தியல் விளைவுகளை மேற்கொண்டனா்.
மேலும், ஒட்டுமொத்த உடலில் பாதிப்பு, அதிகரிக்கும் கல்லீரல் நொதிகள், உறுப்பு சேதம் மற்றும் உடலில் ஒரு வலுவான மற்றும் குறிப்பிடத்தக்க அழற்சி எதிா்வினை, ஆகிவற்றிற்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வில் கண்டறிந்தனா்.
சா்வதேச உயிரியல் பெருமூலக்கூறுகள் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டு அதில் விஷத்தின் வேகம், தாக்கம் குறித்து முழுமையாக எழுதப்பட்டுள்ளது என மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.