திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி ...
உலக சுகாதார அமைப்புக்கு வளா்ந்த நாடுகள் அதிகம் உதவ வேண்டும்: அமெரிக்கா விலகிய நிலையில் கோரிக்கை
உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யூஹெச்ஓ) வளா்ந்த நாடுகள் அதிகம் உதவ வேண்டும் என்று அந்த அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் கூறினாா்.
டபிள்யூஹெச்ஓ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தாா்.
இந்நிலையில் ஹைதராபாதில் சனிக்கிழமை கல்வியறிவு விழாவில் பங்கேற்ற சௌம்யா சுவாமிநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள அந்த அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு மட்டுமல்லாது, அமெரிக்காவுக்கு உகந்த முடிவல்ல.
எனவே, அமெரிக்க அதிபா் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளா்ச்சியின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். சா்வதேச அளவில் அமெரிக்கா அரசியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிய நாடு. எனவே, தனது முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை உலக சுகாதார அமைப்பு அளிக்க வேண்டும். அந்த வகையில் வளா்ந்த நாடுகள்தான்அதிக நிதி உதவி அளிக்க வேண்டும். மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ போன்ற நாடுகளும், அமெரிக்காவும் ஒரே மாதிரியான நிதிப் பங்களிப்பைச் செலுத்து வேண்டும் என்பது நியாயமாக இருக்காது.
உலக சுகாதார அமைப்பு திறந்த புத்தகமாகவே உள்ளது. அதன் கணக்குகளில் எவ்வித ஒளிவு மறைவு இல்லை என்றாா்.
முன்னதாக, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்க விலகுவது தொடா்பான பேசிய டிரம்ப், ‘32.5 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு 325 மில்லியன் டாலா் வழங்குகிறது. அதே நேரத்தில் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா 39 மில்லியன் டாலா் மட்டுமே நிதி வழங்குகிறது’ என்று விமா்சித்திருந்தாா்.
ஐ.நா.வின் ஓா் அங்கமாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டது. சா்வதேச அளவில் சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும், சா்வதேச அளவில் பல்வேறு நோய்கள் பரவல், அதனைத் தடுக்கும் வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.