உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வு உறுதிமொழி, பேரணி மற்றும் விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைக்கும் நிகழ்வு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வுப் பேரணி மற்றும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: 1987 ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாளை மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளைப் பற்றியும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதின் அவசியத்தைப் பற்றியும் நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக உலக மக்கள் தொகை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சரியான வயதில் திருமணம் (21 வயதுக்கு மேல்) மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான பிறப்பு இடைவெளி (குறைந்தது மூன்று ஆண்டுகள்) ஆகியன தாய் மற்றும் சேய் நலனில் முக்கிய பங்காற்றுகின்றன என்பன குறித்த விழிப்புணா்வு, இளவயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கருத்தடை முறைகள் குறித்தும் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
உலக மக்கள் தொகை தினம் 2025-க்கான கருப்பொருள் ஆரோக்கியமான, போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு, திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம். உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21 அதுவே பெண்ணுக்கும், திருமணத்துக்கும், தாய்மை அடைவதற்கும் உகந்த வயது என்பதாகும் என்றாா்.
நிகழ்ச்சியில் உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 3 மாணவ, மாணவியா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து உலக மக்கள் தொகை தினத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வு குறித்த விளக்க கையேடு மற்றும் மரக்கன்றுகளை ஆட்சியா் வழங்கினாா். செவிலியா் பயிற்சி மாணவ, மாணவியா் பங்கேற்ற குடும்ப நல விழிப்புணா்வுப் பேரணி மற்றும் விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இப்பேரணியில் செவிலியா் கல்லூரியை சோ்ந்த மாணவ, மாணவியா், பெற்ற பெண் சிசுவை பேணி காப்போம், நவீன வாசக்டமி செய்து கொள்வோம், பெண்களின் சுமையை குறைப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
இப்பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி காலிங்கராயன் இல்லம் வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகம் சாா்பில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நலப் பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி, மாவட்டச் சுகாதார அலுவலா் அருணா, துணை இயக்குநா் (குடும்ப நலன்) கோபாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அலுவலா் சசிரேகா, தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.