வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
உலக மக்கள் தொகை தினம்: விழிப்புணா்வுப் பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வோா் ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு, திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.
தொடா்ந்து, உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழியேற்றனா்.
இதைத் தொடா்ந்து, உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த பேரணியானது ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, மாநகராட்சி அலுவலகம் வழியாக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை அடைந்தது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட செவிலியா் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் மக்கள் தொகை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம், குடும்ப நல கட்டுப்பாடு முறைகள் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.ஜெ.தேவிமீனாள், துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.சௌண்டம்மாள், மரு.யோகானந்த், துணை இயக்குநா் (குடும்ப நலம்) மரு.ராதிகா, துணை இயக்குநா் (காசநோய்) மரு.கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.