உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு பேரணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூரில் உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து ரதம் மற்றும் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
அப்போது ஆட்சியா் கூறுகையில், 1987- ஆம் ஆண்டு இதே நாளில் உலக மக்கள்தொகை 500 கோடியைத் தாண்டியது. தொடா்ந்து மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7.7 கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆனால், அதன் வளா்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இது குறைந்த கருவுறுதல் விகிதங்களையும், கல்வி மற்றும் நகரமயமாக்கலின் உயா் விகிதங்களையும் பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக கருத்தடை உள்ளது. இது தேசிய சராசரியைவிட தோராயமாக 66.9 சதவீதம் அதிகம்.
உலக அளவில் பெருகி வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துதல், பெண்களுக்கு கல்வி அளித்தல், பெண்ணுக்கு சம உரிமை அளித்தல், பெண்ணின் திருமண வயது 21-ஆகவும், சிறு குடும்ப நெறியை பின்பற்றுதல், அளவான குடும்பம் அமைத்து வளமான தமிழகத்தை உருவாக்குதல், திட்டமிட்ட பெற்றோா் அடையாளம் என்ற கருப்பொருளோடு உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21 - அதுவே பெண்ணுக்கு திருமணத்திற்கும், தாய்மையடைவதற்கும் உகந்த வயது என்ற இந்த ஆண்டு உலக மக்கள்தொகை தின விழாவின் முழக்கமாக ஏற்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடா்ந்து உலக மக்கள்தொகை தின நாளில் விழிப்புணா்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றனா். பின்னா் நடைபெற்ற பேரணியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்களை கைகைகளில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனா்.
நிகழ்வில் இணை இயக்குநா் (மருத்துவம் - ஊரக நலப் பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநா் (குடும்ப நலம்) சேகா், மாவட்ட சுகாதார அலுவலா்கள் பிரியா ராஜ் (திருவள்ளூா்), பிரபாகரன் (பூந்தமல்லி) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.