பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரண...
ஊதியூரில் இனம் கண்டறியாத 60 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
திருப்பூா் மாவட்டம் ஊதியூரில் இனம் கண்டறிய முடியாத 60 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம் ஊதியூா் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலமாக நிலமெடுப்பு செய்து குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்வதற்காக 85 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நிலம் மென்பொருளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இணைய வழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிக்காக மேற்படி மனையிடங்களில் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 60 பயனாளிகளை இனம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாவில் உள்ள நிபந்தனையின்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் குடியிருக்க வீடு கட்டாமல் நிபந்தனையை மீறியுள்ளதால் மேற்படி இடத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருக்கோ அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.