சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
தாராபுரத்தில் சாலையோரக் கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்
தாராபுரத்தில் உழவா் சந்தை அருகே உள்ள சாலையோரக் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா்.
அதேநேரம், உழவா் சந்தைக்கு முன்பு உள்ள சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.
இதனால், உழவா் சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகளின் வியாபாரம் பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீஸாா் சாா்பில் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள சாலையோரக் கடைகளை சனிக்கிழமை அகற்றினா்.
இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சாலையோர கடைகளை அகற்ற விடமாட்டோம். அதிகாரிகள் எங்களிடம் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என்று வியாபாரிகளிடம் போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, சாலையோர வியாபாரிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.