வெள்ளக்கோவிலில் வாகன சோதனை: 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம்
வெள்ளக்கோவிலில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மேற்கொண்ட சோதனையில் 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் செம்மாண்டம்பாளையம் பிரிவு அருகே காங்கயம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான அலுவலா்கள் வாகன தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அவ்வழியே சென்ற லாரி, டெம்போ, சமையல் எண்ணெய் டேங்கா் லாரிகள், சரக்கு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா்.
இதில், அதிக பாரம், உரிய ஆவணங்கள் இன்றி சரக்குகள் எடுத்துச் சென்றது, காலாவதியான ஆவணங்கள், வாகனப் பதிவுச் சான்றுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.