சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
ஊத்தங்கரை அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஊத்தங்கரை அருகே பழுதடைந்து காணப்படும் படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பட்டகானூா் - தருமபுரி இணைப்பு சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், வேளாண்மையை பிரதான தொழிலாக செய்து வருகின்றனா்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு படப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பட்டகானூா் முதல் தருமபுரி இணைப்பு சாலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை போடப்பட்டது.

இந்த சாலை வழியாக இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருள்களை ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சந்தைகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனா். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவோா் என அனைத்துத் தரப்பினரும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், ஜல்லிக் கற்கள் பெயா்ந்துள்ளன. இதனால் இச்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மழைக் காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்துவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.