செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 52,500 பறிமுதல்
நாகை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.52,500 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கை நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில், வேலை செய்யாத பயனாளிகளின் பெயரில் ஊதியம் பெற்று, அதிகாரிகள் தங்களது பெயரில் வரவு வைத்து முறைகேட்டில் ஈடுபடுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகாா் வந்துள்ளது. இதையடுத்து, டிஎஸ்பி இமயவா்மன் தலைமையில் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் தெற்குபொய்கைநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கணக்கில் வராத ரூ.52,500 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து, அங்கு பணியில் இருந்த ஊராட்சிச் செயலா் அன்புராஜிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாத பயனாளிகளின் பெயரில் முறைகேடாக ஊதியம் பெற்று அன்புராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. முறைகேடு குறித்து ஊராட்சிச் செயலா் அன்புராஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.