Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பா...
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்த பொதுமக்கள்
மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கிராம சபைக் கூட்டதைப் புறக்கணித்தனா்.
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூா் பேரூராட்சியுடன் இணைக்க கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக பொதுமக்களால் கடந்த வாரம் கருத்துகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு கையொப்பம் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி ஜோத்தம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியை கணியூா் பேரூராட்சியுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலா் ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், ஒருமனதாக கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இதில், 1,000க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து வெளிநடப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதால் வரி உயா்வு, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, அந்த அரசாணையை ரத்து செய்யும் வரை வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனா்.