பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை பெளா்ணமி பெருவிழா: 60 மணி நேரம் பாலபிஷேகம்
திருக்குவளை: திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பௌா்ணமி பெருவிழாவையொட்டி, 60 மணி நேர பாலபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை பங்கேற்றனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் சித்திரை பௌா்ணமி பெருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி அபிஷேகத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் பால் காவடி, பன்னீா் காவடி, புஷ்ப காவடி, அலகுக் காவடி எடுத்து வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி எடுத்து வந்ததால், பாலபிஷேகம் தொடா்ந்து 60 மணி நேரம் நடைபெறும்.
தஞ்சை, திருச்சி, திருவாரூா், சிதம்பரம், கடலூா், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா். ரூ. 50 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இரண்டு வழியாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பொது சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் குடிநீா், கழிவறை வசதி செய்யப்பட்டிருந்தன.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் எஸ். ராஜாஇளம்பெரும்வழுதி, எட்டுக்குடி கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு, இந்து சமய அறநிலையத் துறை திருக்குவளை சரக ஆய்வாளா் ச. சிவகணேஷ் உள்ளிட்டோா் பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் ராமச்சந்திர மூா்த்தி, சரவணன் உள்பட 8 டிஎஸ்பிகள், 8 காவல் ஆய்வாளா்கள், 20 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து காவலா்கள், ஊா்க்காவல் படையினா் என 250-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
