மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றவா் கைது
நாகப்பட்டினம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, இலங்கை தப்பிச் செல்ல முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பொழிச்சலூரைச் சோ்ந்தவா் கிருபாகரன் (37). இவா், பல இளைஞா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதேபோல, நாகை கல்லறை தோட்டம் உப்பளம் சாலையைச் சோ்ந்த பானுமதி உள்ளிட்ட சிலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10.50 லட்சம் மோசடி செய்ததாக நாகை குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனா். தமிழகம் முழுவதும் மோசடி செய்துள்ளதால், கிருபாகரனை தேடப்படும் குற்றவாளியாக போலீஸாா் அறிவித்தனா்.
இந்தநிலையில், நாகை துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கப்பல் மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல கிருபாகரன் முயன்றுள்ளாா். அப்போது, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் கிருபாகரனை கைது செய்து, நாகை நகர காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கிருபாகரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.