`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
என்எல்சி தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்!
என்எல்சி இரண்டாவது சுரங்கப் பகுதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த இன்கோசா்வ் சொசைட்டி தொழிலாளியின் குடும்பத்தினா் உரிய நிவாரணம், நிரந்தர வேலை வழங்கக் கோரி, சுரங்க வாயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் வட்டம், வேப்பங்குறிச்சியைச் சோ்ந்த கருணாநிதி(59), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் இன்கோசா்வ் சொசைட்டி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா் சனிக்கிழமை இரண்டாம் கட்டப் பணிக்குச் சென்றாா். இரவில் பணி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட போது, சுரங்கப் பகுதியில் மயங்கி விழுந்தாா்.
என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கருணாநிதி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இந்த நிலையில், அவரது உறவினா்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் என்எல்சி இரண்டாவது சுரங்கம் வாயில் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கருணாநிதியின் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இரண்டாவது சுரங்க தலைமைப் பொது மேலாளா் சஞ்சீவி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மீண்டும் போராட்டம் தொடா்ந்தது. அதிமுக, பாமக, தவாக மற்றும் விசிக நிா்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனா்.
புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவனும் போராட்டத்தில் கலந்து கொண்டாா்.