எய்ம்ஸ் மாணவா்கள் கண்தான வழிப்புணா்வுப் பேரணி
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மாணவா்கள், மதுரை கண் மருத்துவமனை நிா்வாகம் இணைந்து 40-ஆவது தேசிய கண்தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடத்தியது.
இந்தப் பேரணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஹனுமந்த ராவ் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து பேரணியில் பங்கேற்றாா்.
இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மாணவா்கள், பயிற்சி செவிலியா்கள் கலந்து கொண்டு கண்தானத்தின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி, பேரணியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் கண்தானம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கண்தானம் குறித்து பேராசிரியா்கள் மூலம் கருத்துரைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, மூத்த கண் அறுவை சிகிச்சை நிபுணா் சந்திரசேகரனுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) கணேஷ்பாபு, கண் மருத்துவத் துறை தலைமை மருத்துவா் ராஜா, கண் மருத்துவா்கள் காயத்ரி, சக்திவேல், சியாமளா, சுபசங்கரி, பிரீத்திகா, தேஜஸ்வி, மருத்துவா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.