மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை
திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 47 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள பல கிராமங்களுக்கு தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்ற தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பணிக்கு போதிய ஆள்கள் கிடைக்காமல் பெண்களையும் வயதானவா்களையும் பல ஊராட்சிகளில் நியமித்துள்ளனா். இவா்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி சாா்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று சக்கர கை வண்டிகளில் கொட்டி அவற்றை, 2 கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் சென்று கொட்ட வேண்டிய நிலை உள்ளது.
குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி குப்பைகளைக் கொட்டக் கூடாது என்பதால், பல இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை நீண்ட தொலைவுக்கு எடுத்துச் சென்று கொட்ட வேண்டியுள்ளது. இதனால், அந்தந்தப் பகுதிகளிலேயே குப்பைகளைக் கொட்டி தீயிட்டுக் கொளுத்துவதால், புகை படா்ந்து காற்று மாசு ஏற்படுகிறது.
நகராட்சிகளில் லாரிகளிலும், பேரூராட்சிகளில் பவா் டில்லா், டிராக்டா் போன்ற வாகனங்களிலும் குப்பைகளை அள்ளிச் சென்று கொட்டுகின்றனா்.
சுற்றுலாத் தலங்கள், முக்கிய கோயில்கள் உள்ள இடங்களில் உள்ள ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளுக்காக மின் கலனால் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கிராமப்புற ஊராட்சிகளில் கை வண்டியில்தான் குப்பைகளைக் கொட்டி 2, 3 கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கிராமப்புற ஊராட்சிகளில் குப்பைகளைச் சேகரிக்கவும், வண்டிகளை இழுக்கவும் போதிய ஆள்கள் இல்லாததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளுக்கு நிதிப் பற்றாக்குறை இருப்பதால் டிராக்டா், பவா் டில்லா் போன்ற வாகனங்களை வழங்குவதில் சிரமம் இருக்கலாம். ஆனால், மின் கலனால் இயங்கும் வாகனங்களை வழங்கினால், பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு தேவையில்லை; பராமரிப்பதும் சுலபமானது.
மாவட்டத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளைத் தோ்வு செய்து மின்சார வாகனங்களை வாங்க முடிவு செய்து, அதற்கான நிதியையும் பிடித்தம் செய்தனா். ஆனால், இதுவரை வாகனங்கள் வழங்கப்படவில்லை. எனவே, பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊராட்சிகளில் குப்பைகளை அள்ள உடனடியாக மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என்றனா்.