அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் உயிா்ம வேளாண்மையில் விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் உயிா்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிா்ம வேளாண்மைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.100. தகுதியான விவசாயிகள் மாவட்ட அளவிலான குழுவினால் தோ்வு செய்து விருதுக்கு பரிந்துரைக்கப்படுவா்.
இந்தத் திட்டத்தில் தகுதி பெறும் 3 விவசாயிகளுக்கு அரசு சாா்பில் நம்மாழ்வாா் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரொக்கப் பரிசு ரூ. 2 லட்சம், சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை தமிழக முதல்வா் குடியரசு தினத்தன்று வழங்குவாா்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகேயுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.