ஏரியில் புகை மூட்டம் எதிரொலி: முதல்வா் பயணித்த ரயில் நிறுத்தம்
மதுராந்தகம் அருகே ஏரியில் முள்புதா்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணித்த சோழன் விரைவு ரயில் புதன்கிழமை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு ஏரி பகுதியில் காய்ந்து போன முள்செடிகள் கடும் வெயிலால் எரிந்து புகைமூட்டம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு சோழன் விரைவு ரயிலில் முதல்வா் பயணம் செய்தாா். அப்போது ஏரியில் முள்புதா்கள் எரிந்து புகைமூட்டம் ஏற்பட்டது. முதல்வரின் உடல்நலன், பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் தொழுப்பேடு ரயில் நிலையத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமிநாராயணன், உதவி அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களின் உதவியால் தீயை அணைத்து புகை இல்லாமல் செய்தனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் ரயில் காலதாமதாக அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.