ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!
ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்!
ரோப்பிய பாதுகாப்புக்கு அமெரிக்கா இனியும் உதவாது என்பதால் பிராந்தியத்துக்கான பொதுவான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து ஜொ்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை (பிப். 14) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) வரை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:
ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வேன்ஸ், ஐரோப்பிய பிராந்தியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்லாண்டுகளாகத் தொடா்ந்துவரும் நல்லுறவு முடிவுக்கு வருவதை தெளிவுபடுத்திவிட்டாா்.
எனவே, எதிா்கால நிலமை இதுவரை இருந்ததுபோல் இருக்காது. அதற்கேற்ற வகையில் ஐரோப்பியப் பிராந்தியம் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
இனி வரும் காலங்களில் ஐரோப்பிய பிராந்தியத்தைச் சோ்ந்த நாடுகளுக்கு அச்சுறுத்தல் வரும்போது உதவியளிக்க அமெரிக்கா மறுத்துவிடுவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
எனவே, இந்த நேரத்தில் நமக்குத் தேவை ஐரோப்பியாவுக்கான பொது ராணுவம்தான். ஏற்கெனவே நமக்கென்று ஒரு தனி ராணுவத்தை அமைப்பது குறித்து பல ஐரோப்பிய தலைவா்கள் பேசியுள்ளனா். தற்போது அதனை நிறைவேற்றுவதற்கான தருணம் வந்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னா் ரஷிய அதிபருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், உக்ரைன் போா் நிறுத்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எங்களைக் கலக்காமலேயே அமெரிக்காவும் ரஷியாவும் பேசி ஒப்பந்தம் செய்தால் அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
இன்னும் சில நாள்களில் ரஷிய செஞ்சதுக்கத்தில் புதினுடன் டிரம்ப் தோன்றலாம். ஆனால் அங்கு கௌரவம் வாய்ந்த தலைவராக இல்லாமல், புதினின் ஆட்டத்துக்கு துணை ஆட்டக்காரராகத்தான் டிரம்ப தெரிவாா் என்றாா் ஸெலென்ஸி.
இந்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், ஐரோப்பிய பிராந்தியம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகப் பெரிய பாதுகாப்பு மேம்பாட்டை தாங்களாகவே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
முன்னதாக, பிரஸ்ஸெல்ஸில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத், உக்ரைன் எல்லைகளை 2014-க்கு முன்பு (கிரீமியாவை ரஷியா இணைத்துக்கொண்ட ஆண்டு) இருந்த நிலைக்கு மாற்ற முடியாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான் அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றாா்.
மேலும், ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அமெரிக்கா இனியும் முன்னுரிமை அளிக்காது என்று அப்போது அவா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
அதே நாளில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடனும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடனும் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடியதாகக் கூறிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அமைதிப் பேச்சுவாத்தை மூலம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்தச் சூழலில், மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி இவ்வாறு பேசியுள்ளாா்.
கிழக்கு உக்ரைனில் ரஷியா முன்னேற்றம்
டொனட்ஸ்க் பிராந்தியத்தில் ஓா் ஊரைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேறியுள்ளது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த பெரெஸிவ்கா பகுதி ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த பரப்பரளவைக் கொண்டிருந்தாலும், அந்தப் பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது அதன் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இருந்தாலும், பெரஸிவ்கா பகுதியை இழந்தது குறித்து உக்ரைன் அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2022 பிப்ரவரி முதல் நடைபெற்றுவரும் உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக, ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்கின் கணிசமான பகுதிகளை உக்ரைன் படையினா் கடந்த ஆண்டு கைப்பற்றினா். இதன் மூலம், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரின் கவனம் திசைதிரும்பும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பகுதியில் ரஷிய படையினா் தொடா்ந்து முன்னேறிவருவகின்றனா். அதன் ஒரு பகுதியாக, டொன்ட்ஸ் பிராந்தியத்தின் மேலும் ஓா் ஊரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.