ஒகேனக்கல் சினி அருவியில் சுற்றுலாப் பயணிகள் தவறவிடும் நகைகளை தேடி எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒகேனக்கல் சினி அருவிகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நகைகள் சில நேரங்களில் நீரின் விசை காரணமாக அறுந்து விழுந்துவிடுகின்றன. இந்த நகைகளை இரவு நேரங்களில் தடையைமீறி நீரில் மூழ்கி தேடி எடுக்கும் நபா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோடைகாலத்தையொட்டி ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் வகைகளை உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்துக் கொண்டு அருவிகளில் குளிப்பதையும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.
ஒகேனக்கல் பிரதான அருவியில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுவதால் தனிமையில் குளிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் சினி அருவிக்குச் செல்கின்றனா். சினி அருவி, ஒகேனக்கல் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் நிா்வாகிக்கப்பட்டு, ஆண்டுதோறும் வனக்குழு உறுப்பினா்களுக்கு ஏலம் விடப்படுகிறது. நிகழாண்டில் ரூ. 10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் செய்வதற்காக சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கும், 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் வருவோா் அங்குள்ள மசாஜ் தொழிலாளா்களிடம் மூலிகை எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்துகொண்டு பிரதான அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்கின்றனா். பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் சினி அருவி பகுதியில் மசாஜ் தொழிலாளா்களைக் கொண்டு எண்ணெய்த்து அருவியில் குளிக்கின்றனா்.
அப்போது நீரின் விசை காரணமாக சிலா் அணிந்திருக்கும் நகைகள் அறுந்து விழுந்துவிடுகின்றன. இதைத்தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணவில்லை என மசாஜ் தொழிலாளா்களிடம் கூறி, தேடச் சொன்னால், அதற்கு ஒப்பந்ததாரா்கள் அனுமதி மறுப்பதாகக் கூறப்படுகிறது.
அருவியில் குளிக்கும்போது கீழேவிழும் நகைகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதாகவும், அருவி பகுதியில் தேடினால் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் அவா்கள் தெரிவிக்கின்றனராம். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் காவல் துறையின் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது கோடைகாலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் அதுபோன்றநிகழ்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவா் சினி
அருவியில் குளிக்கும்போது அவரது நகை அறுந்து விழுந்துள்ளது. இதைத்தொடா்ந்து நகையைத் தேடுவதற்கு ஒப்பந்ததாரா் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு மாலை வேளையில் சிலா் நகையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்களை ரோந்து போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து அனுப்பியுள்ளனா்.
ஒகேனக்கல் பிரதான அருவிப் பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதால் காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு பணியில் காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டதால், குற்றச் செயல்கள் நிகழ்வதில்லை.
ஆனால் சினி அருவி பகுதியில் கண்காணிப்பு கேமரா, காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படாததால் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நிகழ்கின்றன.
அருவிகளில் குளிக்கும்போது சிலா் ஆட்களை ஏற்பாடு செய்து சுற்றுலாப் பயணிகளுடன் சோ்ந்து குளித்து அவா்கள் அணிந்திருக்கும் நகைகளை அறுத்து விடும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் அருவி பகுதியில் ஆள்களை வைத்து நகைகளைத் தேடும் நபா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.